விதைகளை பகுப்பாய்வு செய்து விதைத்தால் கூடுதல் மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை


விதைகளை பகுப்பாய்வு செய்து விதைத்தால் கூடுதல் மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 30 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-31T00:30:45+05:30)

விதைகளை பகுப்பாய்வு செய்து விதைத்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான விதை பரிசோதனை நிலையம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிறரக கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் விவசாயிகள் சாகுபடி செய்ய உள்ள நெல், உளுந்து, கம்பு, பயறுவகை பயிர்கள், எள், மணிலா ஆகிய பயிர்களின் விதைகள் தரமானதாக உள்ளதா? என அறிந்துகொண்டு சாகுபடி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே சாகுபடி செய்யப்பட உள்ள விதை குவியல்களில் இருந்து விதை மாதிரிகளை எடுத்து விதை பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்துகொள்ளலாம். நன்கு சுத்தமான தரமான விதைகளை பயன்படுத்துவதால் இயல்பான நாற்றுகள், பூச்சிநோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை பெற முடியும்.

அதிக மகசூல்

மேலும் நேரடி விதைப்பாக இருக்கும்பட்சத்தில் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். அவ்வாறு சரியான பயிர் எண்ணிக்கை இருந்தால்தான் அதிக மகசூல் எடுக்க முடியும். ஒரு விதை மாதிரியை ஆய்வு செய்திட ஆய்வுக்கட்டணமாக ரூ.80 மட்டுமே செலுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே விதைக்கும் முன் விதைகளை பகுப்பாய்வு செய்து விதைத்திட திருச்சி மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு மூத்த வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், விழுப்புரம் என்ற முகவரியை அணுகலாம்.

இந்த தகவலை விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story