ரூ.2 லட்சம் மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏரியில் வீச்சு


ரூ.2 லட்சம் மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏரியில் வீச்சு
x

அரக்கோணம் அருகே குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏரியில் வீசப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.

ராணிப்பேட்டை

ஏரியில் வீச்சு

அரக்கோணம் தாலுகா அலுவலகம் எதிரே பயன்பாடற்ற வட்டார வேளாண் விரிவாக்க மைய குடோன் உள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்து, மணிலா, உளுந்து, பச்சை பயறு விதைகள் அடங்கிய மூட்டைகளை வைத்திருந்தனர்.

ஆனால் விவசாயிகளுக்கு வழங்காமல் அனைத்து பொருட்களும் குடோனிலேயே வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பொருட்களை மர்ம நபர்கள் சிலர் உளியம்பாக்கம் ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீயாக பரவியது.

அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வடமலை தலைமையிலான அலுவலர்கள் குடோனில் ஆய்வு நடத்தினர்.

பின்னர் அவர் கூறியதாவது:-

காலாவதியானது

2019-ஆம் ஆண்டு முதல் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில் வேளாண் அலுவலகம் மற்றும் குடோன் இயங்கி வருகிறது. தாலுகா அலுவலகம் எதிரே உள்ள இந்த குடோன் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. அதே சமயம் இங்கு காலாவதியான உயிர் உரங்கள் மற்றும் சில வேளாண் பொருட்கள் இருந்தது. சிமெண்டு மூட்டைகள் அடுக்குவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சேர்ந்த ஒருவர் சாவி கேட்டுள்ளார்.

இந்த நிலையில் பொருட்களே ஏரியில் வீசப்பட்டுள்ளது. இங்கிருந்த பொருட்களை ஏரியில் யார் வீசினார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏரியில் வீசப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும்.

இப்போது ஒரு லோடு அளவுக்கு ஏரியில் கொட்டப்பட்ட பொருட்கள் மீண்டும் இங்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆய்வின்போது துணை இயக்குனர் செல்வராஜ், உதவி இயக்குனர் அருணா குமாரி, வேளாண் அலுவலர் அசோக், துணை வேளாண் அலுவலர் ஜெயராமன், உதவி வேளாண் அலுவலர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story