திருச்சியில் இன்று வேளாண் சங்கமம் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
வேளாண்மைத்துறையின் சார்பில் திருச்சியில் வேளாண் சங்கமத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்து விருது வழங்குகிறார்.
சென்னை,
வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் வணிகத் திருவிழா சென்னையில் கடந்த 8-ந் தேதி நடந்தது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்திருந்தார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, திருச்சியில் 3 நாள் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை வேளாண்மைத்துறை நடத்த உள்ளது. அதன்படி, வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த சங்கமம் நடக்க உள்ளது.
மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
திருச்சி கேர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கிவைக்கிறார். இந்த விழா 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று முதல்-அமைச்சர் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார்.
தொடர்ந்து, நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியையும் முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார். வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள் இந்த சங்கமத்தில் கலந்துரையாடப்படுகிறது.
அனைத்தும் ஒரே இடத்தில்...
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளார்கள். இந்த சங்கமம் மூலம் அரசின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
கண்காட்சியுடன், விவசாயிகள் வாங்கிச்சென்று தங்கள் பண்ணையில் சாகுபடி செய்வதற்கேற்றவாறு, புதிய ரகங்களின் காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளில் ஒட்டு ரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்களும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 'இந்த வேளாண் சங்கமம் விழாவில் பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அதிக விளைச்சல் பெற்ற 3 விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசையும் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து விவசாயிகளை அழைத்து வருவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வீதம் கலந்து கொள்வார்கள்' என்றார்.