வேளாண் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்


வேளாண் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
x

கோவை வேளாண்மை பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தற்கொலை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்


கோவை வேளாண்மை பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தற்கொலை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாணவர் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பழனி. அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மகன் பிரோதாஸ் குமார் (வயது 19). இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார். பிரோதாஸ் குமாருக்கு இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.

ஆனால் அவருக்கு அந்த பிரிவில் இடம் கிடைக்காததால் பயோ டெக் பிரிவில் சேர்ந்துள்ளார். விரும்பிய பிரிவில் சீட் கிடைக்காததால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து சாய்பாபாகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களிலோ அல்லது அவற்றுக்கு சொந்தமான விடுதிகளிலோ மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

எனவே மாணவர் பிரோதாஸ் குமார் தற்கொலை வழக்கையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் மாணவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவரின் சொந்த ஊருக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story