பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை,

சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதற்கு, கூட்டத்தில் பங்கேற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஏற்கனவே, தற்காலிகமாக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தமிழ்மகன் உசேன், தற்போது அவைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் பேசியதாவது:-

ரத்தத்தில் கையெழுத்து

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நல்லாசியுடன் பொதுக்குழு நடைபெற்று கொண்டிருக்கிறது. 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆரை திராவிட பேரியக்கத்தில் இருந்து நீக்கியபோது, நான் பார்த்த அரசு வேலையை, அதாவது ஓட்டிக்கொண்டிருந்த அரசு பஸ்சை அப்படியே நிறுத்திவிட்டுஎம்.ஜி.ஆருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 93 எம்.ஜி.ஆர். மன்றங்களுடன் ஆலோசனை செய்து, எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கவேண்டும் என்று ராமாபுரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரின் காலை பிடித்து கதறி அழுதேன்.

அதன்பின்னர் எம்.ஜி.ஆருடன் சத்யா ஸ்டூடியோ சென்றேன். அங்கு, "யாரெல்லாம் நான் கட்சி தொடங்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்" என்று எம்.ஜி.ஆர். கேட்க, 11 பேர் கையெழுத்து போட்டார்கள். அதில் 4-வது கையெழுத்தை ரத்தத்தால் போட்டவன் நான். இதுவே அ.தி.மு.க. உருவாக காரணமாக அமைந்தது.

நன்றி

68 ஆண்டு காலம் பொது சேவையில் என்னை ஈடுபடுத்தி கொண்டு, இந்த இயக்கத்தில் எளிய தொண்டனாக, எந்தவொரு மனமாச்சரியங்களுக்கு இடம்தராமல் எல்லோரும் என் சகோதரர்கள் என்ற அடிப்படையில் பணியாற்றினேன்.

அந்த சாதாரண உள்ள தூய்மையை அறிந்து, இந்த பொதுக்குழு என்னை கவுரவிக்கும் வகையில், ஒரு ஏழைத்தொண்டனும் இந்த சபையில் அவைத்தலைவராக வரலாம் என்ற வரலாற்றை உருவாக்கி தந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர், இதயத்தை தொட்ட தொண்டர்களின் படைத்தளபதி எடப்பாடி பழனிசாமிக்கும், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி.

சட்டரீதியாக பொதுக்குழு உறுப்பினர்களால்தான் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நியதியை ஏற்படுத்தி தந்த எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story