அதிமுக வழக்கு: ஓபிஎஸ் முறையீட்டு மனு நாளை விசாரணை..!


அதிமுக வழக்கு: ஓபிஎஸ் முறையீட்டு மனு நாளை விசாரணை..!
x

அதிமுக வழக்கில் ஓபிஎஸ் முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை,

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். ஓபிஎஸ்-சின் மேல்முறையீட்டை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலிடப்பட்ட நிலையில் மற்ற 3 பேர் தரப்பில் முறையிடப்பட்டதால் 4 பேரின் வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு நாளை (வியாழக்கிழமை) விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளனர்.


Next Story