அதிமுக தலைமை அலுவலகம் என் வீட்டில் எதற்கு நானே திருட வேண்டும்? ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


அதிமுக தலைமை அலுவலகம் என் வீட்டில் எதற்கு நானே திருட வேண்டும்?  ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x

அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்ட யார் அதிகாரம் கொடுத்தது, என் வீட்டில் எதற்கு நானே திருட வேண்டும்? என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனி,

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நேற்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ்-இன் பண்ணை வீட்டிற்கு வந்து

அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனை அடுத்து தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்களிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கவுரமான பொது குழுவில் சி.வி. சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல். எடப்பாடிக்கு வரவேற்பு கொடுக்கபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி என்னை பொதுகுழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்யப்பட்டது.

அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு. அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வர முடியும். பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன்.

ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன். நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது. நான் பேசினால் யாரும் பேச முடியாது. 13 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தான் முதல்-அமைச்சராக ஆக்கினார்.

எடப்பாடி ராஜினாமா செய்யட்டும், நானும் ராஜினாமா செய்கிறேன். கீழே போய் மக்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும். பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள்.ரத்தம் சிந்தி வளர்ந்த இயக்கம் அதிமுக; அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு கட்சியை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story