அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்: அமித்ஷாவை சந்திக்க திட்டம்?
அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். அமித்ஷாவை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுகையில், அண்ணா குறித்து அவர் பேசிய கருத்துகள் பரபரப்பையும், அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது.இதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்திருந்தார். "அ.தி.மு.க.வை, அ.தி.மு.க. தலைவர்களை அண்ணாமலை விமர்சித்து வருகிறார். அண்ணாமலை தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அ.தி.மு.க. கூட்டணி தேவையில்லை என்று போகவேண்டியது தானே... ஆணவத்தில் பேசக்கூடாது. இல்லையென்றால் எங்களுக்கு நஷ்டமில்லை ராஜா" என்று தெரிவித்திருந்தார்.முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அ.தி.மு.க. நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு எதிரான கருத்துகளை கூறி வந்தனர்.
அண்ணாமலைக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த பதிலடி அரசியல் களத்தையே பரபரப்பாக்கியது. 'அ.தி.மு.க. எனும் சிங்க கூட்டத்தை பார்த்து, சிறுநரி ஊளையிடலாமா? எங்களை வைத்து தான் பா.ஜ.க.வுக்கு அடையாளமே இருக்கிறது. இனி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை. பா.ஜ.க. எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். பா.ஜ.க. முதலில் நோட்டாவை ஜெயிக்க முடியுமா?' என்றெல்லாம் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இதை வரவேற்கும் விதமாக 'அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இனி எப்போதுமே வேண்டாம்' என்றெல்லாம் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே போஸ்டர் அடிக்க தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல பா.ஜ.க.வினர் ஆங்காங்கே பதில் போஸ்டர் ஒட்டி வந்தனர்.
இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமூக வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ அ.தி.மு.க. குறித்தோ, கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என்று பா.ஜ.க.வினருக்கு அக்கட்சி தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் பா.ஜ.க.வினர் அமைதியாகி இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் இப்போது அ.தி.மு.க.வும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. 'பா.ஜ.க. பற்றியோ, கூட்டணி பற்றியோ யாரும் விமர்சிக்க வேண்டாம்' என்று அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியது முதல் அ.தி.மு.க.வினர்- பா.ஜ.க.வினர் இடையே மோதல் போக்கு தொடங்கியது. தற்போது இருதரப்பும் தங்கள் தொண்டர்களை அமைதிகாக்குமாறு கூறியிருப்பதின் மூலம் நீடித்து வந்த மோதல் போக்கு தற்காலிகமாக முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். கொச்சி வழியாக டெல்லி சென்றதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து முறையிட திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.