எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான்
ஊட்டியில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு மாரத்தான்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இடையே எச்.ஐ.வி. வைரஸ், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடத்தப்பட்டது. இதை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊட்டி எச்.ஏ.டி.பி. மைதானத்தில் இருந்து தொடங்கிய மாராத்தான் போட்டி யூனியன் சர்ச் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், தமிழகம் சாலை வழியாக மீண்டும் எச்.ஏ.டி.பி. மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் அரசு கலைக்கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பாராட்டு
மாணவர்கள் பிரிவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த அஸ்வின் மற்றும் வாழ்வின் ஆகியோர் முதல் மற்றும் 3-ம் இடத்தை பிடித்தனர். தனியார் கல்லூரியை சேர்ந்த டிவின்ஜோ நாதன் 2-ம் இடம் பிடித்தார்.
மாணவிகள் பிரிவில் தனியார் கல்லூரியை சேர்ந்த ஆர்த்தி, லாவண்யா, அபிகெயில் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதில் டீன் பத்மினி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் இந்திரா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலகு அதிகாரி அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.