மதுரை எய்ம்ஸ் பணிகள் 6 மாதத்தில் தொடங்கும்


மதுரை எய்ம்ஸ் பணிகள் 6 மாதத்தில் தொடங்கும்
x

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் 6 மாதத்தில் தொடங்கும் என்றும், இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.1,978 கோடியாக உயர்ந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்


மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் 6 மாதத்தில் தொடங்கும் என்றும், இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.1,978 கோடியாக உயர்ந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதிய கட்டிடங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.8.11 கோடி செலவில் 20 கிராமங்களில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடங்கள், திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இவற்றின் திறப்பு விழா மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியின் தமிழ்மன்றம் மற்றும் மாணவர் பேரவை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் கிறிஸ் ஏஞ்சல் வரவேற்று பேசினார்.

ரூ.1,978 கோடி

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

ராமநாதபுரம் கல்லூரியில் 150 மாணவர்கள் படிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தற்போது 100 இடங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்து உள்ளது.

அதனால் மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இங்கு படித்து வருகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ரூ.1,264 கோடியில் கட்டிடம் கட்ட 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அங்கு கட்டிடம் கட்டப்படாததால் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரி இயங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 37 மாணவர்கள், 13 மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்துவிட்டது. ரூ.1,978 கோடியில் புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

6 மாதத்தில் பணிகள்

கட்டிடத்திற்கான முழுமையான வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஜைகா நிறுவனம் 82 சதவீதம், அதாவது ரூ.1627.70 கோடி நிதி உதவியும், மத்திய அரசு 18 சதவீதம் நிதியும் தர உள்ளன.

கட்டிட வரைபடத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் விடப்பட்டு, இன்னும் 6 மாதத்தில் பணிகள் தொடங்கப்படும்.

ராமநாதபுரத்தில் ரூ.500 கோடி செலவில் மருத்துவ கல்லூரி மற்றும் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பார்த்திபனூரில் ரூ.1 கோடி செலவில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதனை முதல்-அமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். சுற்றுலா மையமான ராமேசுவரத்தில் மருத்துவ கட்டமைப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்தில் சிக்குபவர்களை மீட்டு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்கி வருகிறது. 1½ ஆண்டுகளில் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 576 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன. அதற்காக தமிழக அரசு ரூ.94.69 கோடி செலவிட்டு உள்ளது.

தரம் உயர்வு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டும்பணி 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இன்னும் 2 மாதத்தில் பணிகள் முடிவடைந்து அனைத்து உயர் சிகிச்சை பிரிவுகளும் செயல்பட தொடங்கும்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியை, மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதற்காக ரூ.53.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story