வள்ளியூர் முருகன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
வள்ளியூர் முருகன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர் முருகன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
குடவறை கோவில்
தென் தமிழகத்தில் குடவரை கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் வள்ளியூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நடைபெறும் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி நேற்று முன்தினம் காலையில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் சுவாமி- அம்பாள் மாலை மாற்றும் வைபவம் நடந்தது.
திருக்கல்யாணம்
தொடர்ந்து சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவில் முருகன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் முருகப்பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுரேஷ் கண்ணன், செயல் அலுவலர் ராதா மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.