ஆறு, வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்


ஆறு, வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்
x

வேதாரண்யத்தில் வாய்க்கால், ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் வாய்க்கால், ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை

வேதாரண்யம் பகுதி வழியாகச் சென்று கடலில் இணையும் வளவனாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, மல்லியனாறு, நல்லாறு, சக்கிலியன் வாய்க்கால் ஆகியன பிரதான வடிகால் ஆறுகளில் சரிவர தண்ணீர் செல்ல முடியாமல் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாணிக்கோட்டகம் சட்ரஸ் முதல் வாய்மேட்டில் இருந்து பிரியும் மானங்கொண்டான் ஆற்றிலும் பல கி.மீட்டர் தூரம் வரை தண்ணீரையே காண முடியாதபடி ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.

இதேபோல மணக்காட்டான் வாய்க்கால், ராஜன்வாய்க்கால், பெரிய வாய்க்கால் என பல்வேறு வடிகால் வாய்க்கால்களையும் ஆகாயத் தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வடிய முடியாமல் பயிர்கள் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது.

அகற்ற வேண்டும்

வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் உடனடியாக வாய்கால்களில் புதர்மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஆறு, வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story