ஆழியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள்


ஆழியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் ஆழியாற்றை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றை உடனடியாக அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் ஆழியாற்றை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றை உடனடியாக அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆழியாறு

ஆனைமலை அருகே ஆழியாறு அணை உள்ளது. இதன் நீர்மட்ட உயரம் 120 அடி ஆகும். இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் கோட்டூர், ஆனைமலை, அம்பராம்பாளையம், மணக்கடவு வழியாக 34 கிலோ மீட்டர் பயணித்து கேரளா செல்கிறது.

இதை கொண்டு கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டம், மயிலாடுதுறை கூட்டு குடிநீர் திட்டம், ஆனைமலை பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஆகாய தாமரைகள்

ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடக்கூடிய ஆழியாற்றில், பாலாறு உள்ளிட்ட சிற்றாறுகள் இணைகின்றன. மேலும் தினமும் 6 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கிறது. ஆங்காங்கே குப்பைகளும் கொட்டப்படுகிறது.

இது மட்டுமின்றி ஆனைமலை பகுதியில் உள்ள ஆழியாற்றில் ஆகாய தாமரைகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக ஆழியாறு மாசடைந்து வருகிறது. மேலும் அந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

நடவடிக்கை இல்லை

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆழியாறு தடுப்பணையில் கட்டுமான பணி நடைபெறுவதால், ஆற்றில் தண்ணீர் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே மணல் திட்டுகள் தென்படுகின்றன. இருப்பினும், தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு ஆகாய தாமரைகள் வளர்ந்து உள்ளது. இதுகுறித்து சப்-கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்றனர்.

பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஆழியாற்றில் ஆகாய தாமரைகளை அகற்ற பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story