பொள்ளாச்சியில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியலில்


தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:58+05:30)

மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை திறந்து நடத்த கோரி பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.யினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை திறந்து நடத்த கோரி பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.யினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

குறைந்தபட்ச கூலி

150 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழிலாளர்கள் போராடி பெற்ற வேலை பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகள் ஆகிய 44 சட்டங்களை நான்கு சட்ட தொகுப்பகளாக மத்திய அரசு மாற்றி உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன இதனை கண்டித்தும், 3 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் என்.டி.சி. ஆலைகளை திறந்து நடந்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்தும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

43 பேர் கைது

இதற்கு தாலுகா செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருந்த ஊர்வலமாக சென்று பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 43 பேரை கைது செய்து வெங்கடேசா காலனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

வால்பாறை

இதேபோல வால்பாறையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம், ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தனபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் டேன்டீ தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்க வேண்டும். சுகாதார துறையில் பணியாற்றி வரும் ஆஷா பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தொழில்வரி பிடிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story