மர்மமான முறையில் இறந்து கிடக்கும் ஆலா பறவைகள்


மர்மமான முறையில் இறந்து கிடக்கும் ஆலா பறவைகள்
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:46 PM GMT)

மர்மமான முறையில் ஆலா பறவைகள் இறந்து கிடந்தன.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதியை வாழிடமாக கொண்டு கடல் ஆலா என்று அழைக்கப்படக்கூடிய கடல் புறாக்கள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக இந்த கடல்புறாக்கள் தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டுகளில்தான் அதிகம் காண முடியும். இந்த நிலையில் மணல் திட்டு பகுதிகளில் இருந்து தனுஷ்கோடிக்கு இரை தேடுவதற்காக கடல் காவா என்று அழைக்கப்படக்கூடிய கடல் ஆலா பறவைகள் அதிகளவில் குவிந்துள்ளன. குறிப்பாக எம்.ஆர். சத்திரத்திற்கும்-அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட வடக்கு கடற்கரை பகுதியில் பல இடங்களில் கூட்டமாக நின்று பறவைகள் இரை தேடுவதையும், ஒன்று சேர்ந்து பறந்து செல்வதையும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். குறிப்பாக சிறிய ஆளா பறவைகள்தான் அதிக அளவில் முகாமிட்டுள்ளன.

இதனிடையே தனுஷ்கோடி எம்.ஆர். சத்திரத்திற்கும்-கம்பிப்பாடுக்கும் இடைப்பட்ட வடக்கு கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் ஒரு சில சிறிய ஆலா பறவைகள் இறந்த நிலையில் கடற்கரையில் கிடந்தன. சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுக்கும் மோகத்தில் இந்த பறவைகளை பறக்க வைப்பதற்காக கற்களை கொண்டு வீசியதில் இறந்ததா? அல்லது மர்ம நபர்கள் வேட்டையாடி விட்டு இந்த பறவைகளை வீசி சென்றனரா? என தெரியவில்லை.

எனவே, வனத்துறை அதிகாரிகள் பறவைகள் முகாமிட்டுள்ள இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு பணியை பலப்படுத்தி, பறவைகள் இறப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story