காரில் கடத்த முயன்ற 4,300 மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு கிருஷ்ணகிரி வழியாக காரில் 4,300 மதுபாக்கெட்டுகளை கடத்த முயன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு கிருஷ்ணகிரி வழியாக காரில் 4,300 மதுபாக்கெட்டுகளை கடத்த முயன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கமலேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் நேற்று கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தினர்.
அதில் ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்து இருந்தனர். மேலும் அவர்களுக்கு பின்னால் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த பெட்டிகளில் சோதனை செய்தனர்.
கணவன்-மனைவி கைது
இதில் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மொத்தம் 4,300 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் லக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த அன்பழகன் (வயது 42), அவரது மனைவி மேனகா (32) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் கர்நாடகாவில் மொத்தமாக மதுபான பாக்கெட்டுகளை வாங்கி திருப்பத்தூருக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார், ரூ.1½ லட்சம் மதிப்பிலான மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கைதான அன்பழகன் கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், மேனகா சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.