சாராயத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும்
வாணியம்பாடி அருகே சாராயத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் கொரிப்பள்ளம் கிராமம் உள்ளது. இந்தப்பகுதி வாணியம்பாடி சரகத்திற்கு உட்பட்ட திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் உள்ளது. மாநிலத்தின் எல்லைப் பகுதி என்பதால் தமிழக சாராய வியாபாரிகளும், ஆந்திர வியாபாரிகளும் இந்த மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் சாராயத்தை ஒழிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, வாணியம்பாடியில் முகாமிட்ட, சாராய வியாபாரி மகேஸ்வரியை கைது செய்ததுடன், சாராயத்தை அடியோடு ஒழித்தார். மகேஸ்வரி உள்ளிட்ட 8 பேரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் சம்பந்தப்பட்ட தாலுகா போலீஸ் நிலைய பகுதியில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30 நபர்களை ஒரே நாளில் அதிரடியாக பணி மாற்றம் செய்தும் உத்தரவிட்டார். இதனால் அந்த பகுதியில் தற்போது சாராய விற்பனை கட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்திற்கு உட்பட்ட திம்மாம்பேட்டை போேலீஸ் நிலைய பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வரும் 50-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக சாராயம் காய்ச்சி வருகின்றனர். இவர்களை கூண்டோடு அழிப்பதற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கொரிப்பள்ளம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் கொரிப்பள்ளம் மலைப்பகுதியில் சாராய வேட்டை நடத்தி சுமார் 6,000 லிட்டர் சாராய ஊறல், சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய அனைத்து பொருள்களையும் அழித்தனர்.