சாராய பாக்கெட்டுகளை கேட்டு போலீசாரிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிய மதுபிரியர்கள்...!


சாராய பாக்கெட்டுகளை கேட்டு போலீசாரிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிய மதுபிரியர்கள்...!
x

கடலூரில் ஓசி ஆட்டோவில் வந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை கேட்டு போலீசாரிடம் மதுபிரியர்கள் கஷ்டப்பட்டு வாங்கியதை வீணாக்கிவிட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வைரலாகி வருகிறது.

கடலூர்,

கடலூரில் ஓசி ஆட்டோவில் வந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை கேட்டு போலீசாரிடம் மதுபிரியர்கள் கஷ்டப்பட்டு வாங்கியதை வீணாக்கிவிட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு-

குறைந்த விலையில் மதுபானங்கள்

தமிழகத்தில் விற்பனையாகும் மதுபானங்களின் விலையை காட்டிலும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறது. மேலும் அங்கு பல்வேறு வகையான மதுபானங்களும் கிடைக்கிறது.

இதுதவிர புதுச்சேரிக்கு வரும் மதுபிரியர்களை தங்களது கடைகளுக்கு கவர்ந்து இழுத்து செல்வதற்காக அனைத்து பேருந்து நிறுத்தங்களில் இருந்தும் மதுபான கடைகளுக்கும், சாராய கடைகளுக்கும் இலவசமாக ஆட்டோ இயக்கப்படுகிறது. இதேபோல் சாராய கடைகளுக்கு கடலூரில் இருந்தும் இலவச ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு படையெடுத்து செல்வார்கள்.

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தலை தடுக்க ஆல்பேட்டை சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் இருந்து கடலூர் மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களையும் கண்கொத்தி பாம்பாக சோதனையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது அதில் 4 பேர் மதுபோதையில் இருந்தனர். மேலும் அவர்கள், சில சாராய பாக்கெட்டுகளையும் வைத்திருந்தனர். இதை பார்த்த போலீசார், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

உடனே மதுபிரியர்கள், நாங்கள் காலையில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் தான் வாங்கி வருகிறோம். அது என்னோட சாராய பாக்கெட், வேற சாராய பாக்கெட் வாங்க பணம் இல்லை. சாராயம் குடிப்பதற்கே ஓசி ஆட்டோவில் சென்றுவிட்டு, அதே ஓசி ஆட்டோவில்தான் வருகிறோம். அதனால் எனது சாராய பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சி கையெடுத்து கும்பிட்டனர்.

இருப்பினும் சாராய பாக்கெட்டுகளை போலீசார் சாலையில் கொட்டி அழித்தனர். கஷ்டப்பட்டு வாங்கிய சாராயத்தை வீணாக்கிவிட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறினர். இதையடுத்து போலீசார், சாராயம் குடித்தால் உடலுக்கு கேடு என்று அறிவுரை வழங்கியதுடன், இனி இதுபோன்று புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையே சாராய பாக்கெட்டுகள் கேட்டு மதுபிரியர்கள் போலீசாரிடம் கெஞ்சிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story