பாம்பன் குருசடை தீவில் கரை ஒதுங்கி கிடக்கும் பாசிகள்
பாம்பன் குருசடை தீவில் பாசிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியை சுற்றி 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இந்த தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் பல அரிய வகையான கடல்பாசிகளும், கடல் புற்களும் உள்ளன. கடல்பாசி மற்றும் கடல் புற்களை உணவாக கடல் பசுக்கள் சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றன. ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் நீரோட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் நீரோட்டம் காரணமாக குருசடை தீவு கடற்கரை பகுதியில் ஏராளமான கடல்பாசிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. அந்த கடல்பாசிகளை வனத்துறையினர் தொடர்ந்து அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குருசடை தீவு பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கும் பாசிகளை படகுமூலம் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, கடல் நீரோட்டம் காரணமாக கடந்த சில நாட்களாகவே தீவு பகுதிகளில் கடல் பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன. இது போன்ற காற்று மற்றும் கடல் நீரோட்ட சீசனில் இயற்கையாகவே கடல் பாசிகள் கரை ஒதுங்குவது வழக்கமான ஒன்றுதான். பாசிகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது என்றார்.