தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி


தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
x

தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டில் (2021-22) நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கின. இதன் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் வழக்கமாக நடைபெறும் நாட்களில் நடத்தப்படாமல் தள்ளிப்போனது. அதன்படி, கடந்த மே மாதத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுதிய ஆண்டு இறுதித்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஓரளவு முடியும் தருவாயில் உள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 17-ந் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 23-ந் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதியும் தேர்வு முடிவு வெளியாக உள்ளது.

9-ம் வகுப்பு தேர்வு

ஏற்கனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவுகள் வெளியாகக்கூடிய நிலை இருக்கிறது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே உள்ள விதிகளின்படி கட்டாய தேர்ச்சி என்ற நிலையில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக ஆண்டு இறுதித்தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தநிலையில் ஆண்டு இறுதி தேர்வை எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என பள்ளி கல்வித்துறை, அனைத்து பள்ளிகளின் தலைமை-ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

சுற்றறிக்கை

அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டிருந்த ஒரு சுற்றறிக்கையில், '9-ம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு பெற்ற மதிப்பெண்கள் எதுவாக இருந்தாலும், தேர்ச்சி வழங்கப்பட வேண்டும். 9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில் எந்த தேர்வும் எழுதாத மாணவர்கள் மற்றும் பள்ளிக்கே வராத மாணவர்கள் தோல்வியுற்றதாக கருதப்படுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைவரும் தேர்ச்சி

இந்த சுற்றறிக்கையின்படி பார்க்கும்போது, 9-ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என வழங்க வேண்டும் என்ற வகையிலேயே இந்த சுற்றறிக்கை அமைந்திருக்கிறது. இதுதொடர்பாக சில பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்டபோது, இதே தகவலைத்தான் அவர்களும் தெரிவித்தனர். மேலும் தேர்வில் பங்கேற்காத பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சில நாட்களில் மறுதேர்வு பள்ளி அளவிலேயே நடத்தி அவர்களையும் தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என்ற நோக்கில் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் தேர்வை எப்படி எழுதி உள்ளார்கள் என்பதை ஆசிரியர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், இறுதி தேர்வு மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்கள் மகிழ்ச்சி

வருகிற 13-ந்தேதி 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற உள்ள நிலையில் கடந்த கல்வியாண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படித்து அனைத்து தேர்வுகளையும் எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் அடுத்த கல்வியாண்டுக்குள் மகிழ்ச்சியுடன் செல்ல இருக்கிறார்கள்.

பள்ளி கல்வித்துறையின் இந்த புதிய உத்தரவால் 9-ம் வகுப்பில் படிக்கும் ஏறக்குறைய 8½ லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறுகிறார்கள். அரசின் புதிய உத்தரவால் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே உற்சாக மிகுதியில் இருக்கிறார்கள். அதேவேளை தேர்வு எழுதாத மாணவர்களை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வைக்கும் முயற்சியில் ஆசிரியர்களும் ஈடுபட இருக்கிறார்கள்.


Next Story