பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை
சீர்காழி பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் துர்கா ராஜசேகரன் கூறினார்.
சீர்காழி:
சீர்காழி பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் துர்கா ராஜசேகரன் கூறினார்.
நகர்மன்ற கூட்டம்
சீர்காழி நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்கள் பேசியதாவது:-
வள்ளி (தி.மு.க):- எனது வார்டில் உள்ள அய்யனார் குளத்தை தூர்வார டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ராஜசேகர் (தே.மு.தி.க):-நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப் பணிகளை உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் டெண்டர் விடக்கூடாது.
மின்விளக்குகள் எரியவில்லை
வேல்முருகன் (பா.ம.க.):- எனது பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் எரியவில்லை. குப்பைகள் அள்ளப்படவில்லை.
சூரியபிரபா (பா.ம.க):- எனது பகுதியில் உள்ள சுகாதார வளாகம் முறையாக சீரமைக்கப்படவில்லை.
ராஜேஷ் (சுயேச்சை):-சீர்காழி நகராட்சியில் குளங்கள் தூர் வாரும் பணியினை ஆன்லைன் மூலம் டெண்டர் விடுவதற்கு முன்பு நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சாமிநாதன் (தி.மு.க):- நகராட்சி ஆணையர் இல்லாமல் கூட்டம் நடைபெற்று வருகிறது. எனவே, நகராட்சிக்கு ஆணையரை நியமனம் செய்ய வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம்
ரமாமணி (அ.தி.மு.க) :- எனது வார்டு பகுதியில் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.
முபாரக் அலி (தி.மு.க):- மணிக்கூண்டு அருகில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.
நாகரத்தினம் (அ.தி.மு.க):-எனது வார்டில் டெண்டர் விடப்படும் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படாமல் உள்ளது.
முழுமதி (ம.தி.மு.க):-எனது பகுதியில் கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
நடவடிக்கை
தலைவர்: ஒவ்வொரு வாரமும் ஒரு வார்டில் மாஸ் கிளீனிங் என்ற பெயரில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும். பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு காவல்துறையிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சீர்காழி பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் நகர்நல ஆய்வாளர் நாகராஜ், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.