காமராஜர் பல்கலைக்கழகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை-போக்குவரத்துக்கழகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


காமராஜர் பல்கலைக்கழகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை-போக்குவரத்துக்கழகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

காமராஜர் பல்கலைக்கழகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துக்கழகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை

காமராஜர் பல்கலைக்கழகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துக்கழகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை பல்கலைக்கழக நகர் பகுதியைச் சேர்ந்த நாகூர்கனி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை-தேனி நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நவீன வரலாற்றுத்துறை தலைவராக உள்ளேன். எங்கள் பல்கலைக்கழகம் 1966-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இங்கு 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்குகின்றன. இங்கு 300 ஆசிரியர்களும், 3 ஆயிரம் ஆசிரியர் அல்லாத அலுவலர்களும் பணியாற்றுகின்றனர்.

இந்தநிலையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றுபவர்கள் என ஏராளமானவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கு டவுன் பஸ்களையே நம்பியுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் பல்கலைக்கழகத்துக்கு டவுன் பஸ்கள் கிடையாது.

கடும் அவதி

மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து தேனி, கம்பம், குமுளி, போடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் பஸ்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழியாக செல்கின்றன. இரவு 10 மணிக்கு மேல் பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்கள், பணியாளர்கள் வெளியூர் பஸ்களில் ஏறினால் பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ்களை நிறுத்த மறுக்கின்றனர். இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பஸ்கள் நிறுத்த நடவடிக்கை

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வக்கீல் கீழடி ராஜா ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தார்.

முடிவில், பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் வசதிகளை கருத்தில் கொண்டு அனைத்து பஸ்களும் பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story