அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டப்படி பெற்ற பணி நியமனத்தை ரத்து செய்ததற்கு தடை
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது.
அர்ச்சகர்கள் நியமனம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்.
தனிநீதிபதி உத்தரவு
எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும்தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இடைக்கால தடை
அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.