அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்
கே.வி.குப்பம் அருகே அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பங்கநேரி தர்மராஜா கோவில் வளாகத்தில், தமிழ்நாடு காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார். புள்ளியியல் இன்ஸ்பெக்டர் அருணா, தலைமை காவலர்கள் சசிகலா, தனலட்சுமி, கே.வி.குப்பம் சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.கே.மோகன் வரவேற்றார்.
கூட்டத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேச நேரம் ஒதுக்கி, அவர்களிடம் அன்பாக பழக வேண்டும். ஆதாரமற்ற, தவறான தகவல்களை யாரும் பரப்பக்கூடாது. பாலியல், இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு தேவை என்பது உள்பட பல்வேறு தகவல்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், வேப்பங்கநேரி பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.