அனைத்து துறை அரசு அலுவலர் பயிலரங்கம்


அனைத்து துறை அரசு அலுவலர் பயிலரங்கம்
x

ஆட்சிமொழிப் பயிலரங்கம் வருகிற 15, 16-ந்தேதிகளில காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக நடத்தப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் வருகிற 15, 16-ந்தேதிகளில காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும். பங்கேற்பவர்களுக்குத் தேநீர், மதிய உணவு, குறிப்பேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்படும். மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை, வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து அலுவலர் ஒருவர் மற்றும் பணியாளர் தொகுதி பொறுப்பு வகிக்கும் கண்காணிப்பாளர் நிலையில் ஒருவர் என இருவர், 2 நாள்கள் நடைபெறும் ஆட்சிமொழிப் பயிலரங்கத்திலும் வருகிற 16-ந்தேதி பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் மாவட்ட நிலை அலுவலர்கள், கோட்ட அலுவலர்கள், வட்டநிலை அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும்.

பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழி திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச்செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம், சுருக்கொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப்படும். ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்க முதல் நாள் தொடக்க நிகழ்ச்சிக்கு மண்டலத் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரும், மாவட்ட வருவாய் அலுவலரும், இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க சிறப்புரையோடு பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிறைவு செய்யப்பெறும். காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஆட்சிமொழி் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story