அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்


அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலருமான ஹர்சகாய்மீனா கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பறையை ஆய்வு செய்த அவர் இலவச கழிப்பறையை தினந்தோறும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய்மீனா தலைமை தாங்கி அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் பேசும்போது, மாவட்டத்தில் உள்ளஅனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் வெளிப்படைத்தன்மையுடன் சரியான பயனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும். புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு அனைத்து பணிகள், சிறப்பு திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை அனைத்து அலுவலர்களும் சிறப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றார்.

சிறுவர்களுக்கு சக்கர நாற்காலி

முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.72 ஆயிரத்து 800 மதிப்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 7 சிறுவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருள்மீனா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயக்குமார், வேளாண் துணை இயக்குனர்(திட்டம்) சுந்தரம், தோட்டக்கலை துணை இயக்குனர்(பொறுப்பு) அன்பழகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா, கோட்டாட்சியர்கள் யோகஜோதி, பவித்ரா, நகராட்சி ஆணையர்கள் குமரன், சரவணன், நகர்மன்ற தலைவர் சுப்ராயலு, உளுந்தூர்பேட்டை மண்டல போக்குவரத்து அலுவலர் செந்தூர்வேல், பெதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story