பாலாற்றில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் பாகுபாடின்றி அகற்றப்படும்


பாலாற்றில் அனைத்து ஆக்கிரமிப்புகளும்  பாகுபாடின்றி அகற்றப்படும்
x

பாலாற்றில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் எந்தவித பாகுபாடியின்றி உடனடியாக அகற்றப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு என்று திருப்பத்தூரில் தனியாக அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாமரங்களில் காய், பூ ஆகியவற்றை பூச்சிகள் தாக்குகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை குளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ணை குட்டையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

ஆக்கிரமிப்புகள்

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் கரை எழுப்ப வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் கிடைப்பதில்லை. சிறுதானியங்கள் பயிரிடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் தேங்காய்க்கு போதிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அதற்கு பதில் அளித்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-

கூட்டுறவு சர்க்கலை ஆலைக்கு என்று தனியாக இடம் வழங்க வாய்ப்பு இல்லை. மாரமரங்களில் பூச்சி தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள பண்ணைகுட்டைகளை சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலாற்றின் அனைத்து ஆக்கிரமிப்புகளும் எந்தவித பாகுபடியின்றி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கழிவுநீர்

பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் ஆற்றில் யார் கழிவு நீர் விடுகிறார்கள் என்பது தெரியவரும். இந்த பணிகளை விரைந்து தொடங்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்படும். சிறுதானியங்கள் குறித்து அனைத்து விவசாயிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வட்டாரம் தோறும் விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் விவசாயி ஒருவருக்கு ரூ.7½ லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் கிணறு அமைத்தல் திட்டத்தின்கீழ் பணிக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ராமச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், துணை இயக்குனர்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலை) தீபா, (வேளாண் வணிகம்) சிவகுமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story