அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

ஆர்ப்பாட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மரகதம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நீலா கண்டன் உரையாற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் ரேகா, தனலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

வேலை பளு

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் மத்திய அரசு நிதி தாமதமான காரணத்தால், மாநில அரசு கிராம சுகாதார செவிலியர்கள் மீது வேலை பளுவை சுமத்தியும், பணி நியமனம் வழங்கப்பட்ட டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவி பணியையும் சேர்த்து பார்த்திட வலியுறுத்தும் அரசின் ஆணையை திரும்ப பெறவும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும்.

தனியார் கட்டிடத்தில் இயங்கும் துணை மைய வாடகையை உடன் வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 2 மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 1 ஆக அடுத்த கட்ட ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்திட போடப்பட்ட அரசாணையை அமல்படுத்திட வேண்டும். அரசாணைக்கு எதிராக அலுவலக நேரம் தவிர்த்து இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்திடவும், பணிக்கு சம்பந்தமில்லாத வேலைகளை செய்ய வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.

கூடுதல் பணி சுமை

புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்களை கட்டி தர வேண்டும். 2,300 காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் அங்கன்வாடி பணியில் இருந்து பயிற்சி பெற்றவர்களை உடனடியாக பணி நியமனம் செய்து தற்போது உள்ள வி.எச்.என்.களின் கூடுதல் பணி சுமையை குறைக்க வேண்டும்.

அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையவும், தாய்சேய் நலப்பணி, தடுப்பூசி பணிகளை சிறப்பாக செயல்படுத்திட தற்போதுள்ள துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story