"இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது"- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி


இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி
x

“இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருக்கிறது” என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

திருநெல்வேலி

"இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருக்கிறது" என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

தொல்.திருமாவளவன்

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி நேற்று பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெல்லைச்சீமையில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தில் முக்கிய தளபதியாக களத்தில் நின்றவர் ஒண்டிவீரன்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவில் எந்த சூழலிலும் கையெழுத்திட மாட்டேன் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். அவரது பேச்சை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

விசாரணை ஆணையம்

நாங்குநேரி மற்றும் கழுகுமலையில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை (அதாவது இன்று) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாங்குநேரி சம்பவம் தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி, மத வெறுப்பு அரசியல் குறித்து விரிவான ஆய்வு அறிக்கை அளிக்க நீதிபதி சந்துரு தலைமையிலான விசாரணை ஆணையத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா கூட்டணி

ஆகஸ்டு 31, செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் மும்பையில் இந்தியா கூட்டணி கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் பங்கேற்கிறேன். இந்தியா கூட்டணி உருவான பிறகு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதாவினர் பதற்றத்துடன் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும், வடமாநிலங்களிலும் தி.மு.க. மற்றும் அதன் தலைமை குறித்து பேசுகிறார்கள். இந்தியா கூட்டணியை உருவாக்க முன் முயற்சி எடுத்த தி.மு.க.வை பிரதமர் மோடியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருக்கிறது.

மணிப்பூர் சம்பவத்தில் உரிய விளக்கம் அளிக்காத பிரதமர் மோடி, மத அடிப்படையிலான பிளவு அரசியல் மூலம் மற்ற மாநிலங்களில் ஆதாயம் தேடப்பார்க்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை பெரும்பான்மையான இந்து மக்களே வீழ்த்துவார்கள். நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் தி.மு.க. மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பா.ஜனதா அரசியல் செய்கிறது. எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. கூட நீட் தேர்வு வேண்டாம் என்று தான் சொல்கிறது. உண்மைக்கு மாறான தகவலை பரப்புவது பா.ஜனதாவின் வழக்கமான கலாசாரம். இதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story