சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஔிபரப்பு -சபாநாயகர் அப்பாவு பேட்டி


சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஔிபரப்பு -சபாநாயகர் அப்பாவு பேட்டி
x

சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்பு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆலந்தூர்,

காமன்வெல்த் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு கனடாவில் நடைபெற்றது. இதில் இந்திய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கனடாவில் இருந்து துபாய் வழியாக சென்னை திரும்பி வந்தார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவுவை சட்டப்பேரவை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

நேரலையாக ஒளிபரப்பு

நாடாளுமன்றத்தின் நடைமுறைகள், மேம்பாட்டு நடவடிக்கைகள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து சபாநாயகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் வரவு-செலவு திட்டத்தை காகிதம் இல்லாத பட்ஜெட்டாக நடத்தப்பட்டது. முதல் முறையாக தமிழகத்தில் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பபட்டு வருகிறது.

சட்டமன்றம் ஆரம்பித்த 1921-ம் ஆண்டு முதல் நூறாண்டு சட்டமன்ற நிகழ்வுகளை இணைய தளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. நூறாண்டு கால சட்டப்பேரவை நிகழ்வுகளை விரைவில் இணையதளத்தில் பார்க்க முடியும்.

தற்போது சட்டப்பேரவை நிகழ்வின்போது வினா-விடை நேரம் மட்டுமே நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவது போல் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்பு உள்ளது.

வேதனை அளிக்கிறது

சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி தந்ததாக தெரியவந்தது. அதன் அடிப்படையில்தான் சீனாவில் இருந்து தேசிய கொடிகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

தற்போது இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தில் 20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அவர்களின் கல்லறையில் ஈரம் காய்வதற்குள் சீனாவில் இருந்து இந்திய தேசிய கொடிகளை இறக்குமதி செய்து மாநாட்டில் பங்கேற்ற சபாநாயகர்கள் கையில் ஏந்தி சென்றது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story