பேளுக்குறிச்சி அருகேஅனைத்து மக்களும் கோவிலில் வழிபட அனுமதி
பேளுக்குறிச்சி அருகே மாரியம்மன் கோவிலில் அனைத்து மக்களும் வழிபட அனுமதி அளித்து நாமக்கல் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேந்தமங்கலம்
மாரியம்மன் கோவில்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினருக்கும், ஒரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மற்றவர்கள் அந்த கோவிலுக்குள் செல்ல முடியாத நிலைமை இருந்தது. அந்த கோவில் ஒரு தரப்பினருக்கு சொந்தமானது என்று கோவில் நிர்வாகிகள் தரப்பிலும், அந்த கோவில் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது என அனைவரும் வழிபடலா என்றும் மற்றொரு தரப்பிலும் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது.
வழிபட அனுமதி
இந்தநிலையில் நேற்று ஒரு தரப்பு மக்கள் திடீரென்று மாரியம்மன் கோவில் முன்பு தேங்காய், பழ தட்டுடன் திரண்டு முற்றுகையிட்டனர். இதை அறிந்த நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் அங்கு நேரில் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதன்பின்னர் கோவில் நிர்வாகிகளிடம் உதவி கலெக்டர் கோவில் சாவியை தருமாறு கேட்டார். அப்போது கோவில் பூசாரி வெளியே சென்றுள்ளதாகவும் அவரிடம் தான் சாவி உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் உதவியுடன் கோவிலின் வெளிப்பூட்டு மற்றும் உள்பிரகார பூட்டு ஆகியவற்றை உடைக்க நாமக்கல் உதவி கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து பெண்கள் பலர் தேங்காய் பழதட்டுடன் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது.