அ.தி.மு.க.வில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும்
ஒரே ஒரு தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி கூறினார்.
ஒரே ஒரு தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி கூறினார்.
அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மயிலாடுதுறையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போட்டி கூட்டம்
ஓ.பன்னீர்செல்வம் கடந்த 21-ந் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தியதும் போட்டியாக எடப்பாடி பழனிசாமி 27-ந் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். எதற்காக அந்த கூட்டத்தை அவர் நடத்தினார் என்று அவருக்கே தெரியவில்லை.
அ.தி.மு.க.வை காப்பாற்றுகிற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். இந்த கட்சியை உடைத்து எடப்பாடி பழனிசாமி என்ன லாபம் காணுகிறார் என்று தெரியவில்லை.அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஆட்சி அமைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கேட்கின்றனர்.
இரட்டை இலை யாருக்கு?
தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிடும்போதுதான் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று முடிவு எடுப்பார்கள். அதுவரை தேர்தல் சின்னம் குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள்.
தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்காது. நீதிமன்ற உத்தரவுப்படியே தேர்தல் ஆணையம் செயல்படும்.
இணைந்து செயல்பட்டால் நல்லது
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள் சேர்ந்து செயல்படலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதுபோல் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான்.
ஒரே ஒரு தேர்தல் வந்தால் அ.தி.மு.க. கட்சி பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்-அமைச்சராக இருந்திருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வந்திருக்காது.
தலைமை யாருக்கு?
சசிகலா, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அனைவரும் ஒன்றிைணந்த பின்புதான் யார் தலைமை என்பதை முடிவு செய்வோம். அதுவரையில் நாங்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மகாகணபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அபுதாஹிர் ஆகியோர் உடன் இருந்தனர்.