அதிமுக விவகாரம்: எல்லா சிக்கலும் விரைவில் தீரும், யார் காரணம் என்பதும் எனக்குத் தெரியும் - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி


அதிமுக விவகாரம்:  எல்லா சிக்கலும் விரைவில் தீரும், யார் காரணம் என்பதும் எனக்குத் தெரியும் - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 26 Jun 2022 1:51 PM IST (Updated: 26 Jun 2022 3:05 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் யாரால் நடத்தப்படுகிறது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் இருந்து மதுரை சென்றடைந்த அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை விமானநிலையத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர், தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன். சதிவலையை பின்னியவர்களுக்கு உரிய பாடத்தை மக்களே வழங்குவார்கள். அசாதாரணமான சூழ்நிலை யாரால், எப்படி, எவரால் ஏற்பட்டது என்பதற்கு மக்கள் தண்டனை அளிப்பார்கள். எல்லா சிக்கலும் விரைவில் தீரும். அதற்கு காரணம் யார் என்பதும் எனக்குத் தெரியும். சதிவலையை பின்னியவர்களுக்கு தொண்டர்களும், மக்களும் உரிய தண்டணையை அளிப்பார்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மனதில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர் செல்வம் தொண்டராக பெற்றது பெரும் பாக்கியம் என அவர்களே கூறியுள்ளார்கள்.

உங்களுடைய எதிர்காலம் என்ன? என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த, ஓ.பன்னீர் செல்வம், என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தீர்மானிப்பார்கள் என்றார்.

மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக தேனி செல்கிறார் ஓபிஎஸ். தேனியில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story