அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்


அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு விடுதியில்தங்கி பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு பள்ளி விடுதிகளில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் காலாண்டு தேர்ச்சி விகிதம் குறித்து விடுதி காப்பாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டில் காலாண்டு தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதங்கள் கொண்ட விடுதி காப்பாளர்களிடம், கலெக்டர் வளர்மதி உரிய விளக்கம் கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அனைவரும் தேர்ச்சிபெற...

விடுதியில் மாலை 9 மணி வரை மாணவ- மாணவிகளுக்கு வகுப்பு எடுத்து தேர்ச்சி விகிதத்தை கட்டாயமாக அதிகரிக்க வேண்டும். வருகை பதிவில் உள்ளவர்களுக்கு மட்டுமே உணவு அளிக்க நிதிகளை பயன்படுத்த வேண்டும். வருகை பதிவில் இல்லாதவர்களுக்கு கணக்கு காட்டக் கூடாது. அடுத்து வரும் மாதாந்திர தேர்வில் கட்டாயமாக விடுதியில் உள்ள அனைவரும் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு சில பள்ளிகளில் தமிழ், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடத்தில் மாணவர்கள் குறைந்த கற்றல் திறமையை கொண்டுள்ளனர். இது ஆசிரியர்கள் குறைபாடாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆகவே முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் அந்த பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை ஆய்வு செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் விடுதிகளில் உள்ள மாணவ- மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, ஆதி திராவிடர் நல அலுவலர் பூங்கொடி மற்றும் விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story