கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேரும் கோவை சிறையில் அடைப்பு


கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேரும் கோவை சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேரும் கோவை சிறையில் அடைப்பு

கோயம்புத்தூர்

கோவை, பிப்.21-

கோவையில் ரவுடியை சுட்டுக்கொன்ற வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

ரவுடி சுட்டுக்கொலை

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. ரவுடியாக வலம் வந்த இவர் மீது கோவை மற்றும் மதுரையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அவரை கடந்த 12-ந் தேதி 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் சத்தியபாண்டி கூலிப்படையாக இருந்து செயல்பட்டு வந்ததும், முன்விரோதம் காரணமாக கோவையை சேர்ந்த சஞ்செய் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

கோர்ட்டில் சரண்

எனவே தலைமறைவாக இருந்த சஞ்செய் மற்றும் அவருடைய நண்பர்கள் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். அத்துடன் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன் அவர்கள் தலைமறைவான 4 பேரின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்பது குறித்தும் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் 4 பேரும் கடந்த வாரத்தில் அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து 4 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சிறையில் அடைப்பு

இது குறித்து தகவல் அறிந்த கோவை தனிப்படை போலீசார் வேலூருக்கு சென்றனர். பின்னர் அவர்கள், சரண் அடைந்த 4 பேரையும் கோவை அழைத்துச்செல்ல கோர்ட்டில் அனுமதி பெற்றனர். பிறகு 4 பேரையும் போலீசார் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அவர்களை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மனு தாக்கல்

இதற்காக கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சஞ்செய், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.



Next Story