கைதான 6 பேரும் மீண்டும் சிறையில் அடைப்பு


கைதான 6 பேரும் மீண்டும் சிறையில் அடைப்பு
x

அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான அதன் நிர்வாகி உள்பட 6 பேர் போலீஸ் காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த சிலர் மாயமானது போன்ற அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியானது.

இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் காவல்

இதனிடையே இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜூமோகன், பணியாளர்களான கோபிநாத், முத்துமாரி, பூபாலன், சதீஷ், அய்யப்பன் ஆகிய 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், காவலில் எடுத்து அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் முத்துமாரி, பூபாலன் ஆகிய இருவரும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால் கோர்ட்டு அறிவுரைப்படி அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்ற 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கு தொடர்பாக அவர்களிடம் தனித்தனி அறைகளில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு அவர்கள் அளித்த பதில்களை போலீசார், வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

மீண்டும் சிறையில் அடைப்பு

இந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே விசாரணையை முடித்து 6 பேரையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மாலை போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து அவர்கள் 6 பேரும் விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.


Next Story