கஸ்பாபேட்டை அண்ணமார் கோவிலில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து திருப்பணி செய்ய நடவடிக்கை; பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு


கஸ்பாபேட்டை அண்ணமார் கோவிலில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து திருப்பணி செய்ய நடவடிக்கை; பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு
x

கஸ்பாபேட்டை அண்ணமார் கோவிலில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு

கஸ்பாபேட்டை அண்ணமார் கோவிலில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கோவில் திருப்பணி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை, கள்ளக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

கஸ்பாபேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சில சமூகத்தினர்களுக்கு குலதெய்வம் ஆகும். பல காலமாக இந்த சமூகத்தினர் வழிபடுகின்றனர்.

தற்போது ஒரு சமூகத்தை சேர்ந்த பிரமுகர்கள், அறநிலையத்துறை மற்றும் பிற சமூக மக்களை கலந்து ஆலோசிக்காமல் கோவிலில் திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்துள்ளனர். அறநிலையத்துறையினர் அனுமதி பெறாமல் தற்போது வரை திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தரவை மீறியும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அனைத்து சமூகத்தினர் சேர்ந்து திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஆற்றின் குறுக்கே பாலம்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கொடுத்திருந்த மனுவில், 'சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் ஊரையும், திருப்பூர் மாவட்டம் தம்மரெட்டிபாளையம் தங்கம்மன் கோவிலையும் இணைக்கும் வகையில் ரூ.12 கோடி செலவில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிலையில் பாலம் அமையும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கல் குவாரி, கிரசர் செயல்படுவதால் அங்கு வெடி வைக்கும்போது, பாலப்பணிகள் பாதிக்கும் என்பது உள்பட பல்வேறு காரணத்தால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே ஈரோடு -திருப்பூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் இந்த பாலத்தை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

பவானி பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'பெரியபுலியூர் வளையக்காரன்பாளையம், மாருதி நகர், அம்மன் நகர் பகுதியில் பெரிய பள்ளத்துடன் ஓடை செல்கிறது. மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இரு புறமும் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஓடையின் குறுக்கே சிறிய பாலம் அமைத்து தர வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

292 மனுக்கள்

இதேபோல் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, போலீஸ் நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 292 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story