உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும்


உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும் என சீர்காழி நகரசபை தலைவர் கூறினார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும் என சீர்காழி நகரசபை தலைவர் கூறினார்.

நகர் மன்ற கூட்டம்

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை எழுத்தர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

பாலமுருகன் (அ.தி.மு.க.):- மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாதபோது, தேர்வடக்கு வீதியில் புதிய மழைநீர் வடிகால் அவசியமின்றி கட்டப்படுகிறது. ஈசானியத்தெருவில் கழிவுநீர் முழுவதும் வந்து தேங்கி நிற்கிறது.இதனால் கொசுதொல்லை அதிகமாக உள்ளது.கொசுமருந்து அடிப்பதில்லை.

ஆக்கிரமிப்புகள்

ராமு (தி.மு.க.):- மீன்மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவேண்டும்.

முபாரக்அலி (தி.மு.க.):-- பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகிறது. இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தரவேண்டும்.

ஜெயந்திபாபு (சுயே.):- எனது வார்டில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி பலமாதங்களாக நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுதொல்லை அதிகரித்துள்ளது.

ராஜசேகரன் (தே.மு.தி.க.):- எனது வார்டில் பூங்கா பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே கிடக்கிறது. இந்த பணி அப்போது நிறைவடையும் அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பணி செய்ய வேண்டும்.

பன்றிகள் தொல்லை

ரேணுகா திருச்செல்வன் (தி.மு.க.):- சீர்காழி நகர் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது.இதனை கட்டுப்படுத்த வேண்டும்.மேலும் திருவிளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

முழுமதி (அ.தி.மு.க.) :- துறையூர், பணமங்கலம் பகுதியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும். கூடுதலாக தெருவிளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

வேல்முருகன் (பா.ம.க.):- இனிவரும் காலம் மழைக் காலமாக இருப்பதால் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும். கழிவுநீர்களை ஓர் இடத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைத்தலைவர்:-எனது வார்டு பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

துர்கா ராஜசேகரன் (நகரசபைதலைவர்):-உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப நிறைவேற்றப்படும் குடிநீர், தெருவிளக்கு, சாலை, சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கூடுதல் நிதி பெற மாவட்ட நிர்வாகத்திடம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Next Story