வடகிழக்கு மழை காலங்களில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
வடகிழக்கு பருவமழை காலங்களில் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்காமல் பாதுகாக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர்.பழனி தலைமை தாங்கி பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீர் உட்புகும் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் மீட்பு நடவடிக்கை குறித்து பேரிடர் ஒத்திகை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வெள்ளம் ஏற்படும் காலங்களில் முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளை நிவாரண முகாம்களில் தங்கவைக்க தேவையான இடத்தை தயார் செய்ய வேண்டும்.
நீர்நிலைகள் பாதுகாப்பு
பொதுப்பணித்துறையினர், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற தேவையான மரம் அறுக்கும் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அணை, ஏரி, குளம், ஆறுகளில் செல்லும் நீரின் அளவு போன்றவற்றை கண்காணித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் எச்சரிக்கை பதாகை அமைத்திட வேண்டும், தேவையான மணல் மூட்டைகளை தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
மருத்துவ முகாம்கள்
காய்ச்சல், தொற்றுநோய் பரவாமல் தடுக்க தேவையான மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறையினர் நடத்துவதோடு அவசர தேவைக்கு மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு மின் தடங்களில் உள்ள மரக்கிளைகளை முன்கூட்டியே மின்வாரியத்துறையினர் அகற்ற வேண்டும், தீயணைப்புத்துறையினர், பொதுமக்களை மழை வெள்ளத்திலிருந்து மீட்பதற்காக படகுகளை தயாராக வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.