'தமிழ்நாட்டில் அனைத்து கிராம மக்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும்'-வைகோ பேச்சு


தமிழ்நாட்டில் அனைத்து கிராம மக்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும்-வைகோ பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘தமிழ்நாட்டில் அனைத்து கிராம மக்களும் சமத்துவ ஒற்றுமையோடு வாழ வேண்டும்’ என்று கலிங்கப்பட்டியில் நடந்த பொங்கல் விழாவில் வைகோ பேசினார்.

தென்காசி

திருவேங்கடம்:

'தமிழ்நாட்டில் அனைத்து கிராம மக்களும் சமத்துவ ஒற்றுமையோடு வாழ வேண்டும்' என்று கலிங்கப்பட்டியில் நடந்த பொங்கல் விழாவில் வைகோ பேசினார்.

பொங்கல் விழா

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள கலிங்கப்பட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊராகும். இங்கு தமிழர் திருநாளாம் தை முதல் நாள் அன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. அதோடு வைகோவின் பாட்டனார் கோபால்சாமி கட்டிய அ.கோ. இல்லம் நூறு ஆண்டுகள் ஆனதால், அதனை சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது.

வைகோ-வைரமுத்து

இதனைமுன்னிட்டு நடைபெற்ற விழாவிற்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ எம்.பி. தலைமை தாங்கினார். தலைமை கழக செயலாளர் துரை வைகோ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் வைரமுத்து, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:-

1923-ம் ஆண்டு எனது தாத்தா, அ.கோ. இல்லத்தை கட்டினார். அவர் முன்ேயாசனையாக இந்த இல்லத்தை கட்டியுள்ளார். காமராஜர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இந்த இல்லத்திற்கு வந்துள்ளனர்.

சமத்துவ ஒற்றுமை

கலிங்கப்பட்டியில் அனைத்து சாதி, மதம், அனைத்து கட்சியினர் உள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். எங்கள் கிராமம் சமத்துவ கிராமமாக உள்ளது. அந்த பெருமையோடு நாங்கள் தமிழ்நாட்டுக்கு முன்மாதிரி கிராமமாக இருக்கிறோம். அதுபோல் தமிழ்நாட்டில் அனைத்து கிராம மக்களும் சமத்துவ ஒற்றுமையோடு வாழ வேண்டும்.

பெற்றோர்கள், பிள்ளைகளோடு அன்புடன் கூடிய கண்டிப்புடன் வாழுங்கள். இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் உயர்ந்த நிைலயை அடைவார்கள். நீங்களும் பெருமை அடைவீர்கள். எனவே சமூக ஒற்றுைமயுடன் வாழ இந்த பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறேன்.

மது நாகரிக விஷம்

கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

மதுகுடிப்பவன் பணம் கொடுத்து தற்கொலை செய்து கொள்கிறான். மதுக்கடைகள் திறந்து இருந்தால் இருக்கட்டும். நீங்கள் உங்கள் வாயை திறக்க வேண்டாம். நீ குடிப்பதை நிறுத்தி விட்டால் உண்மையாகவே உன் மனைவி உன்னைக் கும்பிடுவாள். எனவே மதுவை தூக்கி வையுங்கள். மதுவை ஒதுக்கி வையுங்கள். மது நாகரிகமான விஷம். மது இல்லாத ஊர் என்று சொல்லுங்கள். அந்த ஊரில் நான் தண்ணீர் தொட்டி திறந்து வைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., பூமிநாதன், சின்னப்பன், டாக்டர் ஏ.ஆர்.ரகுராமன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி ஆர்.எஸ். ரமேஷ், நெல்லை கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், குமரி வழக்கறிஞர் வெற்றிவேல், மதுரை ஜெயராமன், திருச்சி சேரன் வெள்ளமண்டி சோமு, தேனி ராமகிருஷ்ணன், திண்டுக்கல் செல்வராகவன், புதுக்கோட்டை கலியமூர்த்தி, விழுப்புரம் ஜெயசங்கா், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வைகோ குடும்பத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தொகுத்து வழங்கினார். முடிவில் வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.




Next Story