பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு: "ராணுவ வீரர் மீதான வழக்கை போலீசார் கிடப்பில் போட்டது கண்டிக்கத்தக்கது" - விசாரணை அதிகாரி ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கை போலீசார் கிடப்பில் போட்டது கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகும்படியும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கை போலீசார் கிடப்பில் போட்டது கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகும்படியும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் கணவர் கூலிவேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வருகிறோம். என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளாள்.. சில மாதங்களுக்கு முன்பு அவள் பள்ளிக்கு சென்றபோது, இதே பகுதியைச் சேர்ந்தவரும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜெயகுமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி, மனஉளைச்சலில் என் மகள் இருந்தாள். என் செல்போனுக்கு தொடர்ந்து அருெவறுக்கத்தக்க குறுஞ்செய்தியை அனுப்பி ஜெயகுமார் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். அதாவது, 'என்னுடன் பேசாவிட்டால், புளியங்குடியில் உனக்கு மை வைத்து என் தோழியாக்கிவிடுவேன்' என மிரட்டும் தொனியில் குறுஞ்செய்தி அனுப்பினார். இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
ராணுவ வீரர் மீது வழக்கு
ஜெயகுமார் என் மகளைப்போல பல சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக தெரியவந்தது. எனவே எனது புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டிடம் முறையிட்டோம். அதன்பின் ஒரு மாதம் கழித்து கடந்த டிசம்பர் மாதத்தில் ஜெயகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் 5 மாதங்களாக கிடப்பில் போட்டு உள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்காமல் இழுத்தடிக்கும் போலீசார் மீது நடவடிக்கை கோரி, தென்காசி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு அளித்தும் பலன் இல்லை. எனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெயகுமார் மீதான பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
விசாரணை அதிகாரிக்கு உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் சத்தியமூர்த்தி ஆஜராகி, ஜெயகுமார் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவரால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.
விசாரணை முடிவில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.