தவறான சிகிச்சை அளித்ததாக கூறிஉறவினர்கள் மறியல்


தவறான சிகிச்சை அளித்ததாக கூறிஉறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 25 May 2023 12:30 AM IST (Updated: 25 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் இறந்தார். அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 23). வெல்டிங் தொழிலாளி. அவருடைய மனைவி இந்திராதேவி (20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்துக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 21-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் இந்திராதேவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதையறிந்த இந்திராதேவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். டாக்டர் களிடமும் தங்களது மகள் இறப்புக்கான காரணத்தை கேட்டு பெற்றோர் அழுது புரண்டனர்.

சாலை மறியல்

இதற்கிடையே நேற்று காலையில் அரசு மருத்துவமனை முன்பு இந்திராதேவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் இந்திராதேவி இறந்து போனார் என்றும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. மாறாக போலீசாருடன், மறியலில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story