நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணியா ...? வெளிப்படையாக பேசிய சீமான்
வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுக்கவும் வாங்கவும் கூடாது என்ற எனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தம்பி விஜய் பேசியுள்ளார்
சென்னை,
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
இவரின் செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சீமான் கூறியதாவது ,
அரசியலுக்கு வர நடிகர் விஜய் விரும்புகிறார்.படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம், பாராட்டலாம். வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுக்கவும் வாங்கவும் கூடாது என்ற எனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தம்பி விஜய் பேசியுள்ளார். அது வரவேற்க வேண்டிய விஷயம்
என்னுடைய கொள்கை வேறு, சமரசம் செய்து கொள்ளும் எண்ணம் என்னிடம் இல்லை. தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம், என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு. தம்பி விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாம், தள்ளி விடக்கூடாது. என தெரிவித்தார்.
அரசியல் தலைவர்களில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிறந்தவர். அவரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட நம்மால் ஆக்க முடியவில்லை என்பது தலைகுனிவான விஷயம்
திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருந்து தகுதி வந்து விடுகிறது என்று நினைப்பது அவமானகரமானது. இது மாறாது. எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும்.என தெரிவித்தார்.