ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மஞ்சள் சிறப்பு மையம் திட்டம்
ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் 4 ஆண்டுகளாக மஞ்சள் சிறப்பு மையம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது
ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக மஞ்சள் சிறப்பு மையம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மஞ்சள் சிறப்பு மையம்
மஞ்சள் மாநகரம் என புகழ்பெற்ற ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி பகுதியில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.
மேலும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு பெரும்பாலான விவசாயிகள் மஞ்சளை பயிரிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்துக்கு அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யக்கூடிய மொடக்குறிச்சி பகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் ஈரோடு மஞ்சளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
10 ஏக்கர் பரப்பளவு
இதைத்தொடர்ந்து கடந்த 2018-2019-ம் நிதி ஆண்டில் மொடக்குறிச்சி பகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க ரூ.3 கோடி நிதி மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் மஞ்சள் சிறப்பு மையத்திற்கு ஏற்ற இடம் தேர்வு செய்யப்படவில்லை. அறச்சலூர் அருகே வடுகபட்டி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் இடம் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு பரிசீலனைக்கு அனுப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒப்புதல் கிடைக்காததால் மஞ்சள் சிறப்பு மையம் திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் முதல் கட்ட பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை.
ஆய்வு கூடம்
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய பகுதிகளில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைப்பதற்காக வடுகபட்டி பகுதியில் 10 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு இடத்தை பெறுவதற்காக நிலசீர்திருத்தத் துறைக்கு ஒப்புதல் கேட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகளை தொடங்கி மஞ்சள் சிறப்பு மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
உடனடியாக தொடங்கவேண்டும்
இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறும்போது, 'மஞ்சள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மொடக்குறிச்சி பகுதியில் விரைவில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்கப்படும் என 4 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பிரச்சினை இருப்பதாகவும், அதனால் அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. பிரச்னையை தீர்க்க முடியவில்லையெனில் மொடக்குறிச்சி தொகுதியில் வேறு இடத்தை தேர்வு செய்து மஞ்சள் சிறப்பு மையத்தை உடனடியாக தொடங்க வேண்டும்' என்றார்.