தடுப்பணைகளை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
ஆழியாறு பழைய ஆயக்கட்டில் உள்ள 5 தடுப்பணைகளை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகளுடன், அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி
ஆழியாறு பழைய ஆயக்கட்டில் உள்ள 5 தடுப்பணைகளை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகளுடன், அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
நிதி ஒதுக்கீடு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டில் பள்ளிவிளங்கால், காரப்பட்டி, பெரியணை, அரியாபுரம், வடக்கலூர் ஆகிய 5 தடுப்பணைகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதற்கிடையில் தடுப்பணைகள் சேதமடைந்ததால் தண்ணீர் வீணாகியது. இதனால் பாசனத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எனவே விவசாயிகள் தடுப்பணைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உலக வங்கி மூலம் தடுப்பணைகளை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆழியாறில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். பாசன சபை தலைவர்கள் லோகநாதன், வித்யாசாகர், வஞ்சிமுத்து, சரவணகுமார், மற்றொரு லோகநாதன் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கண்காணிக்க குழு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உலக வங்கி நிதியுதவியுடன் தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் பழைய ஆயக்கட்டு தடுப்பணைகள் சீரமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை 3 விவசாய பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த போகத்திற்கு வருகிற 16-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். தண்ணீர் திறப்பிற்கு முன் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
புதிய மதகு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பழைய ஆயக்கட்டில் உள்ள 5 தடுப்பணைகள் சேதமடைந்து உள்ளன. ஏற்கனவே தடுப்பணையில் உள்ள கான்கிரீட்டை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கம்பி கட்டி கான்கிரீட் அமைக்கப்படுகிறது. மேலும் மதகுகளும் சீரமைக்கப்படுகிறது. இதேபோன்று குளத்துக்குளத்தில் உள்ள ஒரு மதகு சீரமைக்கப்படுகிறது. மற்றொரு மதகு புதிதாக அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் உலக வங்கி நிதி ரூ.12 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறப்பிற்கு முன் கால்வாய் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.