தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.400 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நல வாரிய தலைவர் பொன்குமார் கூறினார்.
ஊட்டி
தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நல வாரிய தலைவர் பொன்குமார் கூறினார்.
ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வு கூட்டம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆய்வு கூட்டம், ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நேற்று நடந்தது. இதற்கு தொழிலாளர் நலத்துறையின் நீலகிரி மாவட்ட இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், கண்காணிப்பு குழு உறுப்பினர் குரூஸ் முத்து பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பங்கேற்று கலந்துரையாடினார். கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இலவச வீடு
இதையடுத்து வாரிய தலைவர் பொன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சத்தில் இலவசமாக வீடு வழங்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம்(அக்டோபர்) 100 தொழிலாளர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு வீடு கட்ட தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கி உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்
மத்திய அரசு ஜி.எஸ்.டி. மூலம் வசூலிக்கும் பணத்தில் ரூ.100-ல் ரூ.20-ஐ மட்டுமே தமிழ்நாட்டுக்கு கொடுக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும். இதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.