பள்ளிவாசல்களை பராமரிப்பு செய்ய ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிவாசல்களை பராமரிப்பு செய்ய ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களை பராமரிப்பு செய்ய ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செஞ்சிமஸ்தான் கூறினார்.
பேட்டி
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி நேற்று நடந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சிமஸ்தான் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நான் நாகூர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்டேன். நாகூர் தர்கா பராமரிப்பிற்காக முதல்-அமைச்சர் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியின் மூலம் நாகூர் தர்கா பராமரிப்பு செய்யப்பட உள்ளது. இதனை நான் ஆய்வு செய்தேன்.
முதல்-அமைச்சரிடம் பரிந்துரை
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முத்துபேட்டை தர்காவிற்கும் சென்று ஆய்வு செய்தேன். அங்கும் பராமரிப்பு பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரிடம் பரிந்துரை செய்வேன்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களை பராமரிப்பு செய்ய முதல்-அமைச்சர் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதேபோல் தேவாலயங்கள் பராமரிப்பு பணிக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்கள் எதிர்பார்த்தது போல் பாதுகாப்பான ஆட்சி அமைந்துள்ளது. சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக முதல்-அமைச்சர் உள்ளார்.
பிரச்சினைகள் வருகிறது
நாங்கள் ஒரு கட்சியை தேர்வு செய்கிறோம் என்றால் கொள்கை, லட்சியம் அடிப்படையில் தேர்வு செய்கிறோம். அண்ணாமலை அவரது விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளார். அதனால் தான் அவரது விருப்பத்தை தெரிவிக்கும் போது பிரச்சினைகள் வருகிறது. பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராமன் கூறி கட்சியில் இருந்து வெளியே சென்றதற்கான காரணம் குறித்து பிரதமர் மோடியிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






