இலவச பட்டா நிலத்தில் குடியிருக்க அனுமதிக்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா நிலத்தில் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்கினர்.
தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா நிலத்தில் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்கினர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், மானூர் லட்சுமியாபுரம் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
அதில், ''மானூர் தாலுகா லட்சுமியாபுரத்தில் மானூர் வடக்கு தெரு, கரையிருப்பு, சுத்தமல்லி, கல்லூர் பகுதியை சேர்ந்த ஏழை மக்கள் 110 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பட்டா நிலத்தை வேறு நபர்களுக்கு வழங்குவதற்காக வருவாய் துறை அதிகாரிகள் மிரட்டி வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா நிலத்தில் வீடு கட்டி குடியிருக்க அனுமதிக்க வேண்டும். வீடு கட்ட முடியாமல் வறுமையில் வாடும் பொதுமக்களுக்கு வீடு கட்டி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
பட்டா வழங்க...
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த பொதுமக்கள் மணி தலைமையில் வழங்கிய மனுவில், ''மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு 1990-ம் ஆண்டு நிலம் அளந்து கல் நடப்பட்டு 950 மனைகள் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனை ஒதுக்கீடு பெற்றவர்களிடம் இருந்து நிலத்துக்கான கிரையத்தொகை முழுமையாக பெற்று விட்டனர். சிலர் தவணைத்தொகையை செலுத்தி வருகிறார்கள். ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு கிரைய பத்திரம் பதிவு செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் வருவாய் துறையால், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு நில உரிமை மாற்றம் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி, பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
தர்ணா போராட்டம்
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தின் அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், ''உடையார்பட்டி மையப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 70 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை அனைத்து சமுதாயத்தினரும் பொதுவாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகம், பூங்கா அமைக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லை சங்கர்நகர் காமராஜ் நகரை சேர்ந்த ராமசாமி தலைமையில் கிராம மக்கள் கொடுத்த மனுவில், ''எங்களுடைய முன்னோர் நாரணம்மாள்புரம் ராமலிங்கம் கிராமத்தில் 200 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள இடுகாட்டு பாதை தனியாரால் அடைக்கப்படுகிறது. எனவே அந்த பாதையை மீட்டுத்தர வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன் தலைமையில் கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை அருகே திருமலைக்கொழுந்துபுரம் மணக்காட்டில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு சின்னம் கடந்த 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டு படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவிடத்தை தற்போது புதுப்பித்துள்ள நிலையில், போலீசார் திறக்க அனுமதி மறுக்கிறார்கள். அந்த நினைவிடத்தை திறக்க உரிய அனுமதி அளிக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
நிவாரண உதவி
மேலும் பாலாமடையை சேர்ந்த ஆறுமுகக்கனி என்பவர் தண்ணீரில் மூழ்கி இறந்ததற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் வழங்கினார்.
உதவி கலெக்டர் (பயிற்சி) ஷிஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிகண்ணு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.