கம்பம்-ஏகலூத்து சாலையோரம்ஓடையில் குவிந்து கிடக்கும் கழிவுகள்


கம்பம்-ஏகலூத்து சாலையோரம்ஓடையில் குவிந்து கிடக்கும் கழிவுகள்
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:46 PM GMT)

கம்பம்-ஏகலூத்து சாலையோரம் ஓடையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

கம்பத்தில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் மலைப்பகுதியில் இருந்து பெருக்கெடுத்து தண்ணீர், ஓடைகள் வழியாக கம்பம்- ஏகலூத்து சாலையில் உள்ள ஆலமரத்துக்குளம், சிக்காலி ஆகிய குளங்களை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து ஓடை வழியாக கம்பம் நகர் வழியாக வீரப்பநாயக்கன் குளத்தை சென்றடையும்.

இந்த ஓடைகள் செல்லும் வழியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ஆங்காங்கே தடுப்பணை மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஓடையில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரானது நேரடியாக பூமிக்கு செல்வதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் இருந்து தண்ணீர் வரும் ஓடைகளை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் மரக்கழிவுகள், கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். தற்போது கழிவுகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் ஓடைகள் இருந்த சுவடே இல்லாமல் போனது. இதன் காரணமாக மழை காலங்களில் ஓடைகள் வழியாக தண்ணீர் வராமல் விளைநிலங்களுக்குள் புகுந்து வீணாகும் சூழல் உள்ளது. எனவே ஓடையில் குப்பை கொட்டும் நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஓடையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story