கொட்டும் மழையில் வெள்ள பேரிடர் ஒத்திகை பயிற்சி
கடலூர் தாழங்குடாவில் வெள்ள பேரிடர் ஒத்திகை பயிற்சியை கொட்டும் மழையில் தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.
கடலூர்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து நடத்துமாறு சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் வெள்ள பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி நேற்று நடத்தப்பட்டது. கடலூரில் குண்டுஉப்பலவாடி ஊராட்சிக்குட்பட்ட தாழங்குடா கடற்கரையோரம் வெள்ள பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி நடந்தது. இதற்கு கோட்டாட்சியர் அதியமான்கவியரசு தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், தாசில்தார் பூபாலசந்திரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக்பாபு, தேசிய பேரிடர் மீட்புக்குழு இன்ஸ்பெக்டர் கவுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதலுதவி
தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, மீட்பு கருவிகள் இல்லாத போது, கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு தப்பிப்பது, பிறரை காப்பாற்றுவது, காப்பாற்றிய நபர்களை அருகில் உள்ள சமுதாய கூடங்களுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிப்பது, கடலில் விழுந்து தத்தளிப்பவர்களை எப்படி பாதுகாப்புடன் மீட்டு, ஆம்புலன்சை வரவழைத்து அவர்களுக்கு முதலுதவி அளிப்பது, காற்றில் மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்துவது, உயரமான கட்டிடங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது என்பன உள்பட பல்வேறு செயல்விளக்கங்களை கொட்டும் மழையில் பொதுமக்கள் மத்தியில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அளித்தனர்.கொட்டும் மழையில் ஒத்திகை நடந்ததால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே வந்திருந்தனர். இதில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.